×

மரங்கொத்தி

நன்றி குங்குமம் முத்தாரம்

இந்த நவீன காலத்தில் மரங்கொத்திகளைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. ஒருவேளை நாளைய குழந்தைகள் மரங்கொத்தி களைப் புகைப்படத்தில் மட்டுமே பார்க்கக்கூடிய சூழல் உருவாகலாம். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மடகாஸ்கர், மற்றும் தென் - வட முனைப் பகுதிகளைத் தவிர்த்து உலகெங்கும் காணப்படும் ஒரு பறவை மரங்கொத்தி. சுமார் 200 வகையான சிற்றினங்கள் மரங்கொத்தியில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான சிற்றினங்கள் காடுகளிலும் மரங்கள் உள்ள பகுதிகளிலும் வாழ்கின்றன. எனினும் சில இனங்கள் மரங்களற்ற பாறைப்பகுதிகளிலும் பாலைநிலங் களிலும் கூட வாழ்கின்றன. எப்படியிருந்தாலும் 95 சதவீத மரங்கொத்திகள் மர வாழ் பறவைகள்தான். எந்தநேரத்திலும் மரங்களைப் பற்றிக் கொண்டும் தட்டிக்கொண்டுமிருக்கும் ஒரு பறவை இது.

மிகவும் கூர்மையான, கத்தி போன்ற வலுவான அலகு களைக் கொண்ட இந்தப் பறவைகளுக்கு மரங்களில் வாழும் பூச்சிகளே முக்கிய உணவு. இந்தப் பறவையின் நாக்கு நீளமாகவும், பசைத் தன்மையும் கொண்டிருப்பதால் தன் அலகு செல்ல முடியாத மரப் பொந்துகளில் நாக்கை நுழையச் செய்து, அங்குள்ள பூச்சிகளைப் பிடித்து உண்ணும். பூச்சிகள் தவிர, பழங்கள், பருப்புகள், பூவிலிருக்கும் தேன் ஆகியவற்றையும் இவை விரும்பி உண்ணும். மரத்தில் துளையிட்டு குஞ்சு களை வளர்க்கும். தன் இனத்தைச் சேர்ந்த மற்ற பறவைகளுடன் தொடர்புகொள்ள மரத்தை அலகால் தட்டித் தட்டி ஒலி எழுப்புகின்றன. குறிப்பாக இனப் பெருக்கக் காலத்தில் இணையை ஈர்ப்பதற்காக இவ்வாறு ஒலி எழுப்பும்.  இவற்றால் ஒரு நாளைக்கு எட்டு ஆயிரம் முதல் 12 ஆயிரம் முறை மரத்தைத் தன் அலகால் தட்டித் தட்டி ஒலி எழுப்ப முடியும். இப்படி மரங்கொத்திப் பறவையைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆர்.சி.எஸ்

Tags : It is rare to see woodpeckers in this modern age.
× RELATED சென்னையின் குடிநீர் தேவைக்காக ரூ.100 கோடியில் திருநின்றவூர் ஏரி புனரமைப்பு